Sunday, January 13, 2013

திருப்பாவை 30ஆம் பாசுரம் - வங்கக்கடல் கடைந்த


வங்கக்கடல்  கடைந்த மாதவனை கேசவனை(த்) 
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி 
அங்கப்பறை கொண்ட ஆற்றை, அணி புதுவை 
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன 
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் 
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதெம்பாவாய்.

வங்கக்கடல் கடைந்த என்கிற நிகமன பாசுரத்தில் இத்திவ்ய ப்ரபந்தம் கற்பார்க்கு பலனுரைத்து தலைக்கட்டுகிறது.  

கீழே ஓங்கி உலகளந்த பாசுரத்தில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து... நீங்காத செல்வம் நிறைந்திடுமென்று பலன் சொன்னது கோபிகள் தாங்கள் அனுட்டிக்கும் நோன்பினால் விளையக்கூடியது. (கற்புடைய மங்கையர்க்கு ஒரு மழை, அறம் பிறழா  அந்தணர்க்கு ஒரு மழை மற்றும் கோல் பிறழா மன்னருக்கு ஒரு மழை என்று மாதம் மும்மாரி என்பது.)  இப்பாசுரம்  இத்திருப்பாவை கற்றார்க்கு பலன் சொல்லுகிறது.  

கீதாசார்யன் "கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன" என்று ஒரு பலனையும் விரும்பத்தகாது  என்று சொல்லி இருக்க, இங்கு பலன் உரைப்பது கூடுமோ? என சங்கிக்கவேண்டா. பலனை விரும்பக்கூடாதென்று  சொன்ன பகவானுக்கு---செய்கிற கார்யம் நிஷ்ப்பலமாய் விடுமென்று  திருவுள்ளம் அன்றே. நாமாக ஒரு பலனை விரும்பினால் தாழ்ந்த பலனைத்தான் விரும்புவோம். உயர்ந்த பலனை விரும்ப நமக்கு தெரியாது. ஆனது பற்றியே பலனை நீ விரும்பாதே என்றபடி. 

இங்கு அருளிச்செய்யப்படுகிற பலன் எப்படிப்பட்டது என்று பார்க்க வேணும். "செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று திவ்ய தம்பதிகளுடைய 
திவ்ய க்ருபா லாபமேயன்றோ பலனாக சொல்லப்பட்டது. இது சாக்ஷாத் பிராட்டி தானே அருளிச்செய்த பாசுரம். ஆகையாலே திருப்பாவை அனுசந்தானத்தினால் உபய விபூதியிலும் நமக்கு இன்பம் நிச்சந்தேகம் என்று தேறி இருக்க ப்ராப்தம். 

நிகமன பாசுரங்களில் தங்கள் திருநாமத்தை பொறித்து வைத்தவர்கள் நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிபொடிஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இவர்களே. பொய்கையார், பூதத்தார்,பேயார், மழிசையர்கோன் ,நற்பாணன் ஆகிய இவ்வைவ்வரும் தங்கள் திருநாமத்தை பொறித்து வைத்திலர். பொறித்துவைத்த ஆழ்வார்கள் தங்கள் திருநாமத்தை மட்டுமே இட்டு வைத்து இருக்க காண்கிறோம்.  "குருஹூர் சடகோபன் சொன்ன", "மதுர கவி சொன்ன சொல்", "குலசேகரன் சொன்ன", "விட்டுசித்தன் விரித்த", "தொண்டரடிபொடி சொன்ன சொல்", "கலியன் சொன்ன சொல்" என்று தானே உள்ளது.  ஆண்டாள் தன்னைப்பற்றி பேசும் போது நியமேன "பட்டர்பிரான் கோதை" என்றே பேசிப்போருகிறாள். இது திருப்பாவையில் மட்டுமன்று. மேல் நாச்சியார் திருமொழியிலும் பதிகம் தோறும் இது காணலாம். இப்படிப்பட்ட நிர்பந்தத்தை ஆண்டாள் எதற்காக வைத்துக்கொண்டாள் என்னில் "கொல்லை  அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால்,நானும் பிறந்தமை பொய் அன்றே." என்றும், "வில்லிபுதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை, வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே" என்றும் இவள் தாமே அருளிச்செய்த படியால்,"ஆச்சர்யனாலேயே  பேறு"  என்று உறுதி கொண்டவள் இவள் என்று நன்கு விளங்குகிறது. இவ்வுறுதியை உலகம் அறிய காட்டுதற்காகவே "பட்டர்பிரான் கோதை", "விட்டு சித்தன் கோதை", "புதுவையர்கோன் கோதை" என்றிப்படியே ஆச்சார்ய புரஸ்காரேண தன்னை நிர்தேசிக்கிறாள்  என்று உணரக்கடவது. 

இது பற்றியே அடியேன் திருப்பாவையின் ஸ்வாபதேச அர்த்தத்தை ஆச்சார்யபரமாகவே நிர்வஹித்து போருவது. கரை கட்டா  காவேரி போல மஹா பிரவாஹமான இந்த ஸ்வாபதேச அர்த்தங்களை இச்சிறு வாசத்தின் மூலம் மிக நுட்பமாக தெரிவித்த அத்தனை. இங்கனே இதில் உள்ள விசேஷ அர்த்தங்களை எல்லாம் விரிவாக தெரிந்து கொள்வதற்கு ருசியை  உண்டாக்கினபடி இது.

ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

With His blessings, I hope to continue with other paasurams of thiruppavai as well other works available with me as much as possible per day.

Wish you all Happy pongal and Healthy days ahead.

முரளி 
ஜனவரி 13, 2013

திருப்பாவை 29ஆம் பாசுரம் - சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து, உன் 
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து, நீ 
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது 
இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு 
உற்றோமே நாமே, உனக்கே நாம் ஆட்செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

சிற்றம் சிறுகாலே வந்தென்னும் இருபத்தொன்பதாம் பாசுரத்திலே "மற்றை நங்காமங்கள் மாற்று" என்னும் வாக்கியம் மிகவும் சாரமாக கொள்ள தக்கது.

திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தில்(ஓம் நமோ நாராயணாய) மத்யம பதமான நமஸ் ஆனது  காகாஷி ந்யாயத்தாலே முன்னே உள்ள ப்ரணவத்திலே அன்வயித்தும், பின்னே உள்ள நாராயணாவில்  அன்வயித்தும், தன்னோடு அன்வயித்தும் மூன்று விரோதிகளை கழிக்கிறது என்பர். 

முமுக்ஷுப்படியில் "விரோதிதான் மூன்று- ஸ்வரூப விரோதியும், உபாய விரோதியும் ப்ராப்ய விரோதியும்" என்றுமருளிச்செய்து இந்த விரோதிகள் கழிய வேண்டும்  நிலையில் பேச்சு எங்கனே இருக்கும் என்னுமிடத்தை காட்டும்  இடங்கள்: 
  • ஸ்வரூப விரோதி கழிகை ஆவது --"யானே நீ என்னுடமையும் நீயே" என்றிருக்கை
  • உபாய விரோதி கழிகையாவது "களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்" என்றிருக்கை
  • ப்ராப்ய விரோதி கழிகையாவது --"மற்றை நங்காமங்கள் மாற்று" என்று  இருக்கை  
என்று அருளிச்செய்தது பிரசித்தம். ப்ராப்ய விரோதி கழிந்த நிலையில் பாசுரம் இதுவென்பதை  விவரிப்போம்: ப்ராப்யமாவது பலன், பலனை அனுபவிக்கும்போது நேருகிற விரோதம் என்னென்று தெரிந்து கொள்ளவேண்டும். பலனை அனுபவிக்கும் போது ஆனந்தம் அவசியம் உண்டாகும்,
அந்த ஆனந்தம் தன்னுடையது என்று நினைத்தல் பெரிய விரோதி. நிலா, தென்றல்,சந்தனம், புஷ்பம் முதலானவை தமக்கு ஒரு உபயோகமின்றிக்கே பிறர்க்கே உபயோகப்பட்டு பிறரையே ஆனந்தப்படுத்துகின்றன. தாம் சிறிதும் ஆனந்தம் கொள்வதில்லை. அது போலவே பகவானுக்கு நாம் உபயோகப்படும் அளவில் அதனால் ஆண்டவனே  ஆனந்தப்படவேண்டும். "சேதன லாபம் ஈஸ்வரனுக்கே பேறு"என்பதால் ஈஸ்வரனே ஆனந்தம் அடைய வேண்டும். நிலா தென்றல் சந்தனம் புஷ்பம் அசேதனம் ஆகையாலே அவைகள் ஆனந்திக்க ப்ராப்தியில்லை. நாம் சேதனர் ஆகையாலே சைதன்யபிரயுக்தமாக நேரக்கூடிய ஆனந்தம் எங்கனே தவிர முடியும்? என்று கேள்வி பிறக்கும். நம்முடைய கைங்கர்யத்தினால் எம்பெருமான் ஆனந்திக்க அது கண்டு நாம் ஆனந்திக்க குறை இல்லை. ஆளவந்தார் தனது ஸ்தோத்ர ரத்னத்திலே "கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி " என்று எப்போது எனது கைங்கர்யங்களால் இறைவா உன்னை ஆனந்த படுத்த போகிறேன்? என்று அருளி இருப்பது "மற்றை நங்காமங்கள் மாற்று" என்ற இப்பாசுரத்தின் வடிகட்டின சத்சம்ப்ரதாயார்த்த  பொருளையே அருளிற்று.

முரளி 
ஜனவரி 12, 2013

திருப்பாவை 28ஆம் பாசுரம் - கறவைகள் பின் சென்று

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னை 
பிறவி பெரும் தன்னை புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா - உந்தன்னோடு 
உறவேல் நமக்கிங்கு  ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உந்தன்னை 
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறை ஏலோரெம்பாவாய்


கறவைகள் பின் சென்று என்று இருபத்தெட்டாம் பாட்டில் "உந்தன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்பது உயிரான வார்த்தை ஆகும். 

விஸ்வ ரூபம் கண்ட அர்ஜூனன்  ' சகேதி மத்வா பிரசபம் யதுக்தம் ஹே! கிருஷ்ண ஹே! யாதவ ஹே! சகேதி, அஜானதா மஹிமானம்  தவ......தத் க்ஷாமயே தவம் அஹம் அப்ரமேயம்' என்று மிகப்பெரிய  நாமங்களான  நாரயணாதி  நாமங்களை  இட்டு அழையாமல்  யாதவ! கோபால! என்று சிறிய நாமங்களை இட்டு அழைத்துவிட்டேனே; இது உன் பெருமை தெரியாமையினால் செய்த குற்றம்; இதை பொறுத்தருள வேணும்- என்று க்ஷாமணம் கொண்டான். 

கோபிகள் கண்ணனுடைய சௌலப்ய சௌசீல்ய பெருமைகளிலே மிக மிக ஈடு பட்டு விட்டதினால் இவர்களுடைய கொள்கைப்படி அவனுடைய பரத்வம் பயனற்றதாயிற்று.  ஆகவே பரத்வத்துக்கு 
ஏகாந்தமான நாராயண நாமத்தை சொன்னது அபசாரமாக தோற்றித்து இவர்களுக்கு. கோபாலன் கோவிந்தன் தாமோதரன் நவநீத சோரன் என்பன போன்ற திருநாமங்களே பெரிய பெயர்களாகவும், நாராயண நாமம் சிறு பேராகவும் தோன்றிற்று. ஐயோ! என் செய்தோம் என்  செய்தோம்!! "நாராயணனே நமக்கே பறை தருவான் " என்றும் "நாற்றத்துழாய் முடி நாராயணன்" என்றும் சிறு பேர்களை இட்டு வ்யவஹரித்தோமே ! இவ்வபசாரத்திற்கு சீற்றம் கொள்ளாமல் பொருத்தருள வேணும்-- என்று வேண்டிக்கொண்டபடி. 

நாராயண நாமத்தை சிறு பேர் என்றால் இது மஹா அபசாரம் அன்றோ! என்று நினைப்பார்கள் அரசிகர்கள். பகவானை பராத்பரன் என்று துதிப்பது அவனுக்கு உகப்பா? சுலபன், சுசீலன் என்று துதிப்பது உகப்பா ? என்று கேள்வி பிறந்தால், பராத்பரனாக இருந்த இருப்பிலே மிக வெறுப்பு உண்டாகித் தாழவிழிந்தவிடத்திலும், பரத்வத்தையே பேசினால் உகப்பு எங்கனே உண்டாகும்? சீற்றம்தான் பிறக்கும். சீற வேண்டாமென்று பிரார்த்திக்க வேண்டியது கடமையாயிற்று.   

இப்பாட்டில் "உன்றன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது" என்ற வாக்கியம் உயிராகக்கொள்ளத்தக்கது. எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள ஸம்பந்தத்தை  தெரிந்து கொள்வதற்கு மேற்பட்ட கர்த்தவ்யம் நமக்கு எதுவும் இல்லை என்பது நூற் கொள்கை.

மூல சுக்ருதமான ஈஸ்வரனுடைய குண பூர்த்தியை அனுஸந்திக்கையும் , ஸம்பந்தத்தை உணருகையும், பூர்வ அபராதங்களுக்கு க்ஷாமணம் பண்ணுகையும், உபாயபூதனான ஈஸ்வரன் பக்கலிலே உபேயத்தை அபேக்ஷிக்கையும்  ஆகிற இவை ஆறும் அதிகார அங்கங்கள் ஆதலால் இப்பாட்டில் இவ்வாறும்   வெளியிடப்படுகின்றன.

முரளி 
ஜனவரி 11, 2013

Thursday, January 10, 2013

திருப்பாவை 27ஆம் பாசுரம் - கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உந்தன்னை  பாடி பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்னாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனய பல் கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வார
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

கூடி இருந்து குளிர் மாலை - கூடாரை வெல்லும் சீர் பாசுரத்தின் ஈற்றடியில் கூடி இருந்து குளிர்ந்தென்றதை  நோக்கியது இம்மாலை குறிப்பு.

இன்னாரோடு கூடி இருந்தென்று  சொல்லிற்றில்லை ஆகிலும் கூட தகாதவர்களை விலக்கி கூடியே  இருக்க வேண்டியவர்களோடு கூடுகைதான் இங்கு விவக்ஷிதம். குலசேகர ஆழ்வார் ஒரு திருமொழியிலே,

"மெய்யில் வாழ்க்கையை மெய்யெனகொள்ளும் இவ்வையம் தன்னோடும் கூடுவதில்லை யான்", 
"நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம்தன்னோடு கூடுவதில்லை யான்", 
"மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரிநாரோடும் கூடுவதில்லை யான்",
"உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தோடும் கூடுவதில்லை யான்",
"தீதில் நன்னெறி நிற்க அல்லாது நீதியாரோடும் கூடுவதில்லை யான்"

என்று பன்முறையும் கூறினார் கூடத்தகாதவர்களை.  "வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்சரந்தஹ வ்யவஸ்திதிஹி, ந சௌரி சிந்தா விமுக ஜன சம்சாச வைசசம் " என்னும் ச்லோகத்தையே அப்பாசுரங்கள் விவரித்தன ஆயின. அன்னவர்களோடு கூடுவதை விலக்கிக்கொள்கைதானே சிறந்த குளிர்ச்சி ஆகும். அதற்கு மேல் கூடத்தக்கவர்களோடு  கூடவும் பெற்றால் குளிர்ச்சியைப்பற்றி கூறவும் வேண்டுமோ? 

கூடதக்கவர்கள் யாவர் என்னில்? குறிக்கொண்டு கேண்மின்: 
  • "மறம் திகழு மனமொழித்து வஞ்சமாற்றி வன்புலன்களடக்கி இடற்பாரத்துன்பம் துறந்து இரு முப்போழுதேத்தி எல்லை இல்லா தொல் நெறிக்கண் நிலை நின்ற தொண்டர்", 
  • "தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாங்குழுமி திருபுகழ்கள் பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகியேத்தும் அவர்கள்", 
  • "அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்கள்",
  • "தென்னரங்கனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் ஆட்ட மேவி அலர்ந்தழைத்து  அயர்வெய்தும் மெய்யடியார்கள்",
  • "பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்றிருக்கும் அவர்கள்",
  • "பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுது கொண்டிருக்கும் அவர்கள்",
  • "த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்களாய் ராமானுஜ பாதாம்போஜ சமாஸ்ர்யணசாலிகளாய் இருக்குமவர்கள்", மேலும், 
  • "அபகத மதானைரந்திமோபாய நிஷ்டைரதிகத  பரமார்த்தை அர்த்தகாமநாபேக்ஷை நிகில ஜன சுஹ்ருத்பிஹி நிர்மித க்ரோத லொபைஹி  வர வர முநிப்ருத்யை அஸ்து  மே நித்ய யோகஹ" என்று நித்ய குதூஹலசாலிகளாய், "மனவாளமாமுனிவன்  பொன்னடியாம் செங்கமலபோதுகளை உன்னிச்சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன்" என்கிற அத்யவசாயத்தில் தலைநின்றிருக்குமவர்கள்
  • உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ப்ராவண்யமும் ஆஹார நியதியும் அனுகூல சஹவாசமும் பிரதிகூல சஹவாச நிவ்ருதியும் உடையராயிருக்குமவர்கள், பின்னும்,
  • "தம் நெஞ்சில் தோற்றியதே சொல்லி" உலகத்தை வஞ்சியாதே, முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனை பேசுமவர்கள், நித்ய சஹவாச யோக்யர்கள்,
  • ஆசார்யர்கள் அனைவரும் முன்னாசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற வார்த்தைகளை கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னிலே நிலை நின்றிருக்குமவர்கள், நித்யானுபவ யோக்யர்கள்.
கூடி இருப்போம் என்றாலே போதுமே, அதற்கு அதற்கு மேல் குளிர்வோம் என்று ஒன்று கூற வேணுமோ என்னில்,கூடி இருந்தே கண்வளர்ந்து போதை போக்குவதுண்டே; அங்கனின்றி "அவிரலித கபோலம் ஜல்பதோர க்ரமேண, அவிதித கதயாமா ராத்ரிரேவ வ்யரம்சீத் " என்று சக்கரவர்த்தி திருமகனார் சொன்னபடியே ஆக வேணுமென்கை.

முரளி
ஜனவரி 10, 2013
Wish you all happy Bhogi/Pongal.

Wednesday, January 9, 2013

திருப்பாவை 25ஆம் பாசுரம் - ஒருத்தி மகனாய் பிறந்து

ஒருத்தி மகனாய் பிறந்து
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகி தான் தீங்கு நினைந்த
கருத்தை பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் 
நெருப்பென்ன நின்ன நெடுமாலே
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்க உரை:
ஒருத்தி மகன் பாசுரத்தின் ஈற்றடியில் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தென்றிருப்பதை நோக்கியது இம்மாலை குறிப்பு.

வருத்தம் தீர்ந்தது எதனாலே என்பதை நாம் ஊஹித்தறிய வேண்டாதபடியே  அது பாசுரதிலேயே 
பொறிக்கபட்டுளது. திருத்தக்க செல்வமும் சேவகமும் பாட, அதனால் வருத்தம் தீர்ந்ததாக சொல்லப்பட்டிரா நின்றதிரே அப்பாடலின் பொருள் கேளீர் (திருத்தக்க செல்வம்) "துல்ய சீலவையோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷநாம் ராகாவோர்ஹதி வைதேஹீம் தம்சேய மசிதேக்ஷணா" என்று திருவடி சொன்னபடியே பிராட்டிக்கு தக்க பெருமாளும் பெருமாளுக்கு தக்க பிராட்டியுமாக அமைந்த தகுதியான செல்வத்தை பாடி கொண்டே வந்தோம் என்பது அன்யாபதேசத்தில். 

ச்வாபதேசத்திலோ என்னில்: பெரிய பிராட்டியாரோடு ஒத்த செல்வம் உடையவர் சுவாமி எம்பெருமானார். நம்போல்வாற்கு புருஷ கார கருத்தியம் பண்ணி எம்பெருமானடி சேர்ப்பிக்கையே பிராட்டிக்கு செல்வம். அவருடைய திருவடி சம்பந்தம் இல்லாதார்க்கு மோக்ஷமில்லை என்பது சம்ப்ரதாயம்.(சேவகமும் யாம் பாடி) இரட்டுற மொழிதலால் சேவகம் என்ற சொல் பரத்வ சௌலபியங்களை சொல்லும். தமிழில் சேவகம் என்று வீரத்துக்கும் பெயர் ஆதலால் பரத்வம் தெரிவிக்க பட்டதாகும். வட மொழி விகாரம் என்று கொண்டால் சேவக வருத்தி செய்வது என்று பொருள் பட்டு சௌலப்யம் தெரிவிகக்கபட்டது .

திருத்தக்க செல்வம் என்பது திருத்தத்தக்க செல்வம் என்ற படியுமாகும். "ஒண் சங்கதை வாளாழியான் போலே". "பயனன்றாகிலும் பாங்கல்லாராகிலும் செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்" என்றும் "இராமானுச!  நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனக்கு ஆக்கியபின் " என்றும்  சொல்லுகிறபடியே "உலகில் திருந்தாதார் தம்மை திருத்துகை ஆகிற செல்வம்" அன்றோ ஆச்சார்யர்களுடையது.

"பணிமானம் பிழையாமே அடியேனை பணி கொண்ட" என்றவிடத்து ஈட்டில் ஐதிஹ்யம் கண்டு அனுசந்திப்பது. "ச்க்காலித்யெ சாசிதாரம்" என்பதன்றோ ஆச்சார்ய லக்ஷணங்களில் தலையானது. (சேவகமும்) கண்ணனிடத்திலே பரதவ சௌலபியங்கள் மாறி மாறி விளங்கினாபோலே ஆச்சார்யர்களும், தங்களது ஞான விளக்கத்தை நோக்கும் போது  பரத்வம் தோன்றும். அவர்கள் சம்சாரிகளோடு புரையற கலந்து பழகும் போது  சௌலப்யம் தோன்றும். ஆகா இவற்றையெல்லாம் சிந்தை செய்வார்க்கு வருத்தங்கள் தீர்ந்து மகிழ்ச்சி யே யாகும் என்ன தட்டுண்டோ?

திருத்தக்க செல்வம் என்பதற்கு உட்புகுந்து  ஆராய்ந்து அறியக்கூடிய சீரிய பொருள் ஒன்று கேளீர். நம்முடைய சம்பிரதாயத்தில் வ்யவஹாரங்கள் எல்லாம் திரு என்னும் சொல்லின் சேர்த்தியினாலே மிக சிறப்பு பெற்றிருக்கும். பிறர் அபிஷேகம் என்பர். நாம் திருமஞ்சனம் என்போம் பிறர் பாதம் என்பர், நாம் திருவடி என்போம். பிறர் துளசி என்பர், நாம் திருத்துழாய் என்போம். பிறர் ஆராதனம் என்பதை நாம் திருவாராதனம் என்போம். பிறர் சயனித்தல், நித்ரை செய்தல் என்பர், நாம் திருக்கண் வளர்தல் என்போம். பிறர்  ஆடி பூரம் என்பர் நாம் திருவாடி பூரம் என்போம். ஆக, திருத்தக்க செல்வமாவது திருவென்னும் சொற் சேர்த்தியினால் விளைந்த சம்பிரதாய செல்வம். இப்படிப்பட்ட விலக்ஷண சம்பிரதாயத்திலே நாம் ஜனிக்க பெற்றோம் என்று சிந்தனை செய்யச்செய்ய வருத்தமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகுமஅன்றோ! திருத்தக்க செல்வம் என்பதை பன்னி உரைக்குங்கால் பாரதமாம்.

எத்தனை அழகு வார்த்தைகளில்!

சௌ.வை.ராமன் 
ஜனவரி 9, 2013

திருப்பாவை 26வது பாசுரம் - மாலே மணிவண்ணா


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவன்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சஜன்யமே 
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்.

மாலே மணிவண்ணா பாசுரத்தின் ஈற்றடியில் ஆலினிலையாய் அருளென்றிருப்பதை நோக்கியது இம்மாலை குறிப்பு.

யசோதை பிராட்டி கண்ணனை ஆலிலைத்துயின்ற குழவியாகவே அடிக்கடி சொல்லுவாள். 
அம்புலியை அழைக்குமிடத்து "பாலகனென்று பரிபவம் செய்யேல், பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்" என்றாள்.  
செங்கீரை ஆட வேண்டும்போது "உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா.....ஆலினிலை அதன் மேல் பையவுயொகு துயில் கொண்ட பரம்பரனே" என்றாள். 
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வாவென்னும்பொது  "ஆலத்திலயானரவின் ஆணை மேலான்" என்றாள்.  
பூச்சூட வாராய் என்றழைக்கும்  போது "உண்டிட்டு உலகினை ஏழும் ஒராலிலையில் துயில்கொண்டாய்"என்றாள். 
இங்ஙனே அபரிமிதம். 

எம்பெருமானுடைய அற்புதமான  செயல்களில் "ஞாலமேழும் உண்டு ஆலமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் துயின்ற செயலுக்கு ஈடானது எதுவுமில்லை. ஒரு பெரிய பாசுரம் இட்டு அருளி இக்கதையை பரம போக்யமாக பேசினவர் நம்மாழ்வார் ஒருவரே, திருவாசிரியத்தின்  நிகம பாசுரம்
"நளிர்மதி சடையனும், நான் முகக்கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனு முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீ கால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடின்றி  முழுவதும் அகப்பட கரந்து
ஒராலிலைச்சேர்ந்த எம்பெருமா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே." 
என்று வெகு அற்புதமாக அமைந்துள்ளது. 

இதை சிறிது விவரித்து அனுபவிப்போம் இங்கு. "நளிர் மதி சடயனென்னும் இப்பாட்டின் கீழ்பாட்டில் ஆழ்வார்க்கு ஒரு பெரிய துயரமுண்டாயிற்று. (அதாவது) சகல சேதனர்களும் ப்ராப்த சேஷியான எம்பெருமானை அடி பணிந்து அவனுக்கே வழுவிலாவடிமை செய்ய ப்ராப்தமாய் இருக்க அது செய்யாதே தேவதாந்தரங்களை பஜிப்பதும் ஜீவஹிம்ச ரூபமான கொடிய காரியங்களாலே அந்த க்ஷுத்ர தெய்வங்களை ஆராதிப்பதுமாய் இருந்து சம்சாரத்தையே பூண் கட்டி கொள்ளுகிறார்களே! அந்தோ! இது என்ன அநீதி! என்று துயருற்றார். ஒரு சம்சாரியும் ஆழ்வாருடைய துயரத்தை பரிஹரிக்க முன் வராமல் போகவே இப்பாழும் சம்சாரிகள் எக்கேடாவது கெடட்டும்; நாமும் இவர்களை போலே அனர்த்தப்பட்டு போகாமே எம்பெருமானுக்கே அடிமைப்பட்டு இருக்க பெற்றோமே என்று உகந்து அவ்வுகப்பை வெளியிடுகிறார் இப்பாட்டில்.  

சம்சாரிகள் பஜிக்கிற பிற தெய்வங்கள் யாவும் நம்மை போலவே பலவகை ஆபத்துகளுக்கு உள்ளாகி எம்பெருமானுடைய திருவருளால் தப்பி பிழைப்பவர்களே ஒழியே தங்களுடைய ஆபத்துக்களை தாங்களே பரிஹரித்து கொள்ளவோ பிறருடைய ஆபத்துக்களை தாங்கள் பரிஹரிக்கவோ ஆற்றல் உடையவர்கள் அல்லர்  என்பதை விளக்க வேண்டி இந்த தெய்வங்கள் எல்லாம் பிரளய காலத்தில் எம்பெருமான் திருவயிற்றிலே ஒடுங்கிக்கிடந்து ரக்ஷை பெற்றவை காண், ஆகா ஆலினிலையான் இதிகாசம் கையிலங்கு நெல்லிக்கனி யாக விளக்க இந்த பாசுரம் அமைந்தது.

சௌ.வை.ராமன் 
ஜனவரி 9, 2013

Tuesday, January 8, 2013

திருப்பாவை 24வது பாசுரம் - அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

இரக்க மாலை

அன்று இவ்வுலக பாசுரத்தின் ஈற்றடியில் இன்று யாம் வந்தோம் இரங்கென்று இருப்பதை நோக்கியது இம்மாலை குறிப்பு. 

கண்ணபிரானை நோக்கி இறங்கவேணும் பிரானே ! என்று பிரார்த்திக்கப்படுகிறது.

"ந அசௌ புருஷ காரென ந  சாபி அனன்யென ஹேதுனா ,கேவலம் ச்வெச்சையவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாச்சன "என்றும் நிர்ஹெதுக கடாக்ஷேன மதீயேன மகாமதே, ப்ராப்யோஹம் ந அன்யதா 
ப்ராப்யஹ -- என்றும் அவன் தானே அருளிசெய்திருக்க, கடாக்ஷித்து அருள வேணும், இரங்க வேணும் என்றும் தத்வ வித்துக்கள்  பிரார்த்திக்க தகுமோ  என்று சந்தேகப்படுவதுண்டு. 

கடாக்ஷிப்பதும் இரங்கி அருள்வதும் அவன் திருவுள்ளத்தினால் ஆகும் அத்தனை அல்லது ஒருவருடைய பிரார்த்தனை மூலம் ஆக கூடியது அன்று. ஆனாலும் அது புருஷார்த்தமாக வேன்டியதற்காக அப்ரதிஷேத உத்யோதுகமாயும், சைதன்ய காயகாமையும் இத்தலையில் பிரார்த்தனை உண்டாகிறது.

நம்முடைய பிரார்த்தனைக்காக அவன் இறங்கினான் என்றோ கடாக்ஷித்தான் என்றோ தத்வ வித்துக்கள் ஒருக்காலும் நினையார்கள். நம்முடைய வாய் படைத்த பிரயோஜனம் பெறுவதற்காக நாம் எம்பெருமானை நோக்கி ஏதோ சொல்ல வேண்டியது கடமை ஆகிறது."ஸா ஜிஹவா  யா ஹரிம் 
ச்தௌதி " என்றபடி நாபடைத்த பிரயோஜனம் பெருகைக்கு எம்பெருமானை துதிக்க வேண்டியது அவர்ஜநீயமாஹிறது. " ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டதி அகர்மக்ருத் " என்று  கீதாசார்யன் சொன்னபடி எதையாவது (த்ருனசெத கண்டூயனாதிகள் போன்ற  கார்யங்களை) செய்து கொண்டும், வாய் மூடியிருக்க முடியாமல் பேசிக்கொண்டும் போதை போக்க வேண்டி இருக்கிறது. அங்கனே  நிகழும் வாய் பேச்சுக்களிலே ' ந ஹி கல்யாண்கிருத் கச்சித்  துர்கதிம் தாத கச்சதி ' என்றதை நோக்கி நன்றான வார்த்தைகளை பேச விரும்பி பகவத் பாகவத   ஆசார்ய  விஷயங்களிலே நாவை செலுத்தி துதிகள் செய்கிறோம். அப்படிப்பட்ட துதிகளில் ஏதாவதொரு  வினை முற்று (கரியா பதம்) இட வேண்டியதாகிறது.  "உன்னை நான் அடைந்தேன் " உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேன்", உனக்கு அடிமை தொழில் பூண்டேன்", உன்னை எங்கனம் விடுகேன்?,"உனக்கு பல்லாண்டு கூறுவன், ஒரு நாள் காண வாராய்","என்னை நீ குறிக்கொள்ளே","ஒருவன் அடியேன் உள்ளான்" என்று இப்படி பலப்பலவகையாக பேசும் அடைவிலே "அடியேன் இடரை களையாயே", "நெடியாய் அடியேன் இடர் நீக்கே", "அடியேற்கு ஒரு நாள் இரங்காயே","தாமரை கண்களால் நோக்காய்", என்று இப்படியும் வார்த்தைகள் வெளி வருகின்றன.

இப்படி உலகம் அளந்தது, தென்னிலங்கை செற்றது, சகடம்  உதைத்தது, கன்று குணிலா எறிந்தது, குன்று குடையா எடுத்தது, கையில் வேலால் வென்று பகை கெடுத்தது முதலான ஆறு அபதானங்கள் ஆச்சார்ய சார்வ பௌமரும் செய்த விஷயங்களை பற்றி உள்ளுறை பொருளாக விளக்கபடுகிறது.

(so many pages are there so i stop with this for this paasuram)

சௌ.வை.ராமன்
ஜனவரி 7, 2013   

திருப்பாவை 23ஆம் பாசுரம் - மாரி மலை முழைஞ்சில்

"மாரி மலை முழைஞ்சில்" பாசுரத்தின் ஈற்றடியில் "யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்" என்பதில் நோக்கியது இம்மாலைக்குறிப்பு.

தாம் வந்த காரியம் இன்னது என்பதை சொல்லாதே காரியம் ஆராய்ந்து அருள் எண்ணக்கூடாது.  கீழ் பாட்டிலே, எம்மைக்கடாக்ஷித்து அருள வேணும் என்று பிரார்த்தித்த ஆய்ச்சிகளை நோக்கி கண்ணபிரான் "ஆயர் சிறுமிகளே! என்னிடம் பலர் வந்து 'கடாக்ஷிக்க வேணும் - கடாக்ஷிக்க வேணும்' என்பதுண்டு; கண்ணைத்திறந்து பார்ப்பது தானே கடாக்ஷம்; பார்த்தாயிற்று போங்கள்" என்றால், உடனே ஒரு காரியமாக வேண்டும் என்று ப்ரஸ்தாபிப்பர்கள்.  "நீங்களும் அப்படி ஒரு காரியத்தை உத்தேசித்து வந்தவர்கள் தானே!; அது இன்ன காரியம் என்பதை சொல்லி விடுங்கள்" என்று பணித்தான். 

அது கேட்ட ஆய்ச்சிகள் "பிரானே! திருப்பள்ளியறையில் சயனித்த படியே என்ன காரியம் என்று கேட்டருளாதே, உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காஸனத்திருந்து அதன் பின் யாம் வந்த காரியம் இன்னது என்பதை ஆராய்ந்து அருள்" என்றார்கள்.

எனவே இங்கு "ஆராய்ந்து அருள்" என்பதற்கு ஆலோசித்தருள் அன்பாடு பொருள் அன்று; "வினவி அருள்" என்பது பொருள்.  இவர்கள் வந்த கார்யத்தை இப்பாட்டிலும் சொல்லவில்லை, மேல் பாட்டிலும் சொல்லவில்லை என்று பலர் நினைப்பார்கள்.  இரண்டு பாட்டிலும் சொல்லியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து அறிய வேணும்.  ஆராய்ச்சியில் வல்லவர்களே இதை அறிய வல்லவர்கள் என்று காட்டவே ஆராய்ந்து அருள் எனப்பட்டது.

கீழே எட்டாம் பாட்டிலும், ஆராய்ந்து அருள் என்றுள்ளது.  இங்கும் அங்கனமேயுள்ளது.  ஆனால் பொருளில் வாசியுண்டு.  அங்கு "அருள்வான்" என்பது அருள் என்று குறைந்து கிடக்கிறது, "தேவாதி தேவனை நாம் சென்று சேவித்தால் (அவன்) ஆராய்ந்து ஆவாவென்று அருள்வான்" என்றதங்கு.  இங்கு அருளவேண்டுமென்று வேண்டுகோள். அருள்...ஏவலோறு வினை முற்று ஏங்க. நுனி புல் மேய்வார் கடக்க நின்று "ஸாரம் து ஸாரஸ்வதம் ஜாநேதே நிதரம்" என்னும்படியான ஞானப்பெருமை வாய்ந்தவர்கள் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் வந்த கார்யம் இப்பாட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது என்று அறியலாம்.

"வந்த கார்யம்"  என்றது வருகைக்கு உறுப்பான கார்யம் என்றபடி.  "யத் கார்யார்த்தம் வயம் ஆகதஸ்மஹா, தத் கார்யம் விசாரயேத்யர்த்தாஹா ".  இவர்களுக்கு உத்தேச்யமான கார்யம் இப்பாட்டில் தெரிவிக்கிறது கேண்மின் - கண்ணபிரான் பள்ளி கொள்ளும்போது  "ஏரார் கோலம்  திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே" என்றும், "அம்மாமலர்க்கண் வளர்கின்ற எண்ணன் செய்கேனே" என்றும் ஈடுபட்டு, "அரவணையாய் ஆயரேரே துயிலெழாயே" என்று திருப்பள்ளி உணர்த்தவேண்டுமென்பது ஒரு கார்யம்.  இக்கார்யம் நிறைவேறியாயிற்று. 

அடுத்த கார்யங்கள் -
உள்ளிருந்து புறப்பட்டருளும் அழகு காணவேணும், சீரிய சிங்காசனத்து வீற்றிருக்கும் அழகு காணவேணும், பல்லாண்டு பாடவேணும் என்பன.  இவை ஒவ்வொன்றும் சமப்ரதரங்களான கார்யங்கள்.  புறப்பட்டு அருளும் அழகு காணுகையும், வீற்றிருக்கும் அழகு காணுகையுமாகிற கார்யங்கள் ஆனவை விண்ணப்பம் இப்பாட்டிலேயே சித்தித்துவிட்டன. பல்லாண்டு பாடுகையாகிற கார்யம் அடுத்த பாட்டில் நிறைவேறுகிறது. 

பெருமாள் புறப்பட்டருளும் அழகுண்டே, அது வாசமகோசரம்.  இது விசேஷித்து நம்பெருமாள் சந்நிதியிலே அனுபவிக்கத்தக்கது. श्री ராமாயணத்தில் பெருமாளுடைய புறப்பாட்டின் அழகை "பர்வதாதிவ நிஷ்க்ரம்ய சிம்ஹோ கிரி குஹாசயஹா" என்று வால்மீகி வர்ணித்தார்.  அதையே ஆண்டாள் இப்பாட்டில் நான்கு அடிகளாலே விவரித்து உரைத்தாள்- 
"மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
அதற்க்கு மேல் "உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி" என்பதனால் நடையழகு காணும் ஆசை தெரிவிக்கப்பட்டது.  அசோக வனத்தில் அலற்ற நின்ற பிராட்டி "தன்யா பச்யந்தி மே நாதம் சிம்ஹ விக்ராந்த்த காமினம்" என்று பெருமாளுடைய நடை அழகை நினைந்து புலம்பினாள்.   "அக்ரதச்தெ கமிஷ்யாமி ம்ருதுனந்தி குச கண்டகான்" என்று சொன்னவள் முன்னே போகாமல் "அக்ரத ப்ரய்யௌ ராமஹ சீதா மத்யமே சுமத்யமா" என்னும்படி பெருமாளை முன்னே போக விட்டுத் தான் பின்னே போனது அவருடைய நடையழகைக் காணவேண்டி அன்றோ?  அந்த நடையின் சிறப்பு விளங்கவே முனிவனும் யயௌ என்னதே ப்ரயயௌ என்றான்.  சுமித்திரை இளையபெருமாளுக்கு வனப்ரயாண அனுமதி தரும் இடத்து "ராமே ப்ரமதம் மஹர்ஷி புத்ர ப்ராத்ரி கச்சதி" என்று கோரினவள் பெருமாளுடைய  நடையழகிலே துவக்குன்னதே கொள்ளை என்றன்றோ சிக்ஷித்தது?  கச்ச மாதுல குலம் என்ற இடத்தில் உள்ள கச்சது போலன்றே இந்த கச்சது?  

இனிக் கண்ணபிரானுடைய நடையழகு பற்றி சொல்லவேணுமோ? கானகம் பாடி உலாவி கருஞ்சிறுக்கன் குழலூதினபோது, மேனகையோடு திலோத்தமை அரம்பை உருபசியவர் வெல்கி மயங்கி, வானகம் பாடியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் அவை மாறினர்தாமே" எனும்படியாக அன்றோ கண்ணபிரான் உலவுதல்?   

இவ்விதமே நாம் ஆசார்யர் எம்பெருமானுடைய திக் விஜய யாத்திரையில் எங்கும் சிம்ஹ கர்ஜனையாகவே இருந்தபடியை சொன்னவாறு - "பூதரும்போலே" அங்கு இங்கு உவமையாகக்கூறியிருந்தாலும் உபமான அர்த்தங்களுக்கு உபமேயம் தன்னில் உப சம்ஹாரம் என்று கொள்ளவேணும்.  உன் கோயில் என்று ஸ்வாமியின் திரு அவதார ஸ்தலமான sri பெரும்பூதுரை விவரிக்கிறது.  அங்கு நின்றும் பெருமாள் கோயில் ஆகிய காஞ்சிபுரிக்கு எழுந்தருளியும் திருமலைக்கு எழுந்தருளியும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு எழுந்தருளியும் திருநாராயண புரம் எழுந்தருளியும்...இங்ஙனே போந்தருளும் படியை சொல்லுகிறது.

சௌ.வை.ராமன் 
ஜனவரி 6, 2013

திருப்பாவை 22ஆம் பாசுரம் - அங்கண் மா ஞாலத்தரசர்


இப்பவும் "சங்க தமிழ் மாலை முப்பது" என்ற திருப்பாவை வியாக்யான புத்தகத்தில் நான் படிக்கிற ஒவ்வொரு பாவை பாசுர விளக்கங்கள் மிகவும் அருமை.  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

இனி அங்கண் மா ஞாலத்தரசர் என்று துவங்கும் பாசுர விளக்கம் :

அங்கண் மா ஞாலத்தரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிகட்டின் கீழே
சங்கமிருப்பார் போலே வந்து தலைபெய்தோம்
கிண்கிணி வாய் செய்த தாமரை பூப்போலே
செங்கண் சிறிசிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கனிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். 

என்ற இருபத்திரண்டாம் பாசுர விளக்கம் பிரதிவாதி பயங்கர அண்ணன்கரசார்யர் எழுதியது:

அங்கண் மா ஞால பாசுரத்தில் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்  எங்கள் மேல் சாபம் இழிந்து என்று இருப்பதை நோக்கி இம்மாலை குறிப்பு.

சாபத்தை ஒருவர் போக்குவதாக பாசுரத்தில் சொல்லப்படவில்லை. சாபம் தன்னடையே தொலையுமேன்றே சொல்லபடுகிறது. "விழுந்தான்" என்பதற்கும் "தள்ளுண்டான்" என்பதற்கும் எவ்வளவு  வித்யாசம் உண்டோ அது போல வாசி உண்டு  நிவ்ருதிக்கும் நிவாரணத்திற்கும். 

எம்பெருமானுடைய கடாக்ஷம் சாப நிவாரணம் செய்வதாகக்கொண்டால் என்ன குறை என்று மன்றாட வேண்டாம், தப்பென்று நாம் சொல்லி விட்டால் தப்புதான் அது. த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் - (இராமாயணம்) என்பதை நினைப்பது, ஆய்ச்சிகள் தங்கள் மேல் ஏதோ சாபம் இருப்பதாக இப்பாட்டில் சொல்லுகிறார்களே, இவர்களுக்கு எவ்விதமான சாபம்?, யார் கொடுத்த சாபம்?, எப்போது கிடைத்த சாபம்? என்று கேட்க  வேண்டா ; அவசியம் அனுபவித்தே தீர  வேண்டியதான பாபமே சாபம் என்பது . எம்பெருமானை விட்டு பிரிந்திருப்பது பிரபல பாபத்தின் பலன் ஆதலால் இதுவே சாபம் எனப்படுகிறது. இது அவன் தந்திருக்கண்  பட்டவாறே தொலையும்.  இங்கு "ச்ரமணி(சபரி ) விதுர, ரிஷிபத்னிகளை  (அஹல்யா ) பூதராக்கின புண்டரிகாஷன் நெடுநோக்கு சாபம் இழிந்தென்ன பண்ணுமிரே "
என்கிற ஆசார்ய ஹ்ருதய  சூரணை  வ்யாக்யானத்துடன்  அனுசந்திக்கத்தக்கது. 

எம்பெருமானுடைய ஒவ்வோர் அவயவமும் ஒவ்வொருத்தருடைய சாபம் தீர்த்தது. 

திருவடி தூள் அஹல்யாவின் சாபம் தீர்த்தது. திருமுழந்தாள்  குபேர  புத்ரர்களான நள குபர மனிக்ரீவர்களின் சாபம் தீர்த்தது. (யமளார்ஜுன  பங்க  கதையை  நினைப்பது ). 

திருத்துடைகள் மது கைடபர்களின் சாபம் தீர்த்தன. (பிஷ்ட துஷ்ட மது கைடப  கீடௌ ) இத்யாதி சுந்தர பாஹுத்வ சூக்தியை நினைப்பது ) 

ருத்ர  சாபம் மார்பில்  ச்வேதத்தாலே  தீர்ந்தது, 

துர்வாச சாபம் மார்பில் இருப்பாளாலே  தீர்ந்தது.  

இப்போது திருக்கண்களால்  ஒரு சாபம்  தீர்கிறது. நித்ய சம்ச்லேஷம் கிடைப்பதே  இவர்களுக்கு சாபம் தீர்வதாம்.

எம்பெருமானுடைய  திருமேனியில் மூன்று திவ்ய அவயவங்கள் பக்தர்களுக்கு முக்கியமானவை . அவற்றுள் முதலிலே திருக்கண்." ஜாயமானம் ஹி  புருஷம் யம்  பச்யேத் மதுசூதனஹ , சாத்விக  ஸ  து விக்நேய  ஸ வை  மோக்ஷார்த்த  சிந்தக " என்ற படியே  ஜாயமான காலத்திலேயே கடாக்ஷித்து  சாத்விகத்தை உண்டாக்க வல்லதன்றோ இது. அப்படி கடாக்ஷிக்க பெற்றவர்களுக்கு  திருவடியே தஞ்சம் ஆகிற படியால் அது  இரண்டாவதான அவயவம். அப்படி திருவடிகளிலே விழுந்தவர்கள்
 "அஞ்சேல் என்று கை கவியாய் "என்று  அபய  பிரதானத்தையே  விரும்பி கொண்டிருபவர்கள் ஆதலால் அபயமுத்ராஞ்சிதமான  ஹஸ்தம் மூன்றாவதான அவயவம். இவை எல்லாவற்றிலும் முக்கியமான அவயவம் திருக்கண்களே  ஆகும். அவற்றால் கடாக்ஷிக்க பெற்றால் சாபம் என்று பேர் பெற்ற எல்லாம் தொலைந்து போம். உள்ளுறை பொருள் ஆக ஆச்சார்ய கடாக்ஷ பிரதானம் விளக்கப் படுகிறது.

சௌ.வை.ராமன்
ஜனவரி 5, 2013