Sunday, January 13, 2013

திருப்பாவை 29ஆம் பாசுரம் - சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து, உன் 
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து, நீ 
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது 
இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு 
உற்றோமே நாமே, உனக்கே நாம் ஆட்செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

சிற்றம் சிறுகாலே வந்தென்னும் இருபத்தொன்பதாம் பாசுரத்திலே "மற்றை நங்காமங்கள் மாற்று" என்னும் வாக்கியம் மிகவும் சாரமாக கொள்ள தக்கது.

திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தில்(ஓம் நமோ நாராயணாய) மத்யம பதமான நமஸ் ஆனது  காகாஷி ந்யாயத்தாலே முன்னே உள்ள ப்ரணவத்திலே அன்வயித்தும், பின்னே உள்ள நாராயணாவில்  அன்வயித்தும், தன்னோடு அன்வயித்தும் மூன்று விரோதிகளை கழிக்கிறது என்பர். 

முமுக்ஷுப்படியில் "விரோதிதான் மூன்று- ஸ்வரூப விரோதியும், உபாய விரோதியும் ப்ராப்ய விரோதியும்" என்றுமருளிச்செய்து இந்த விரோதிகள் கழிய வேண்டும்  நிலையில் பேச்சு எங்கனே இருக்கும் என்னுமிடத்தை காட்டும்  இடங்கள்: 
  • ஸ்வரூப விரோதி கழிகை ஆவது --"யானே நீ என்னுடமையும் நீயே" என்றிருக்கை
  • உபாய விரோதி கழிகையாவது "களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்" என்றிருக்கை
  • ப்ராப்ய விரோதி கழிகையாவது --"மற்றை நங்காமங்கள் மாற்று" என்று  இருக்கை  
என்று அருளிச்செய்தது பிரசித்தம். ப்ராப்ய விரோதி கழிந்த நிலையில் பாசுரம் இதுவென்பதை  விவரிப்போம்: ப்ராப்யமாவது பலன், பலனை அனுபவிக்கும்போது நேருகிற விரோதம் என்னென்று தெரிந்து கொள்ளவேண்டும். பலனை அனுபவிக்கும் போது ஆனந்தம் அவசியம் உண்டாகும்,
அந்த ஆனந்தம் தன்னுடையது என்று நினைத்தல் பெரிய விரோதி. நிலா, தென்றல்,சந்தனம், புஷ்பம் முதலானவை தமக்கு ஒரு உபயோகமின்றிக்கே பிறர்க்கே உபயோகப்பட்டு பிறரையே ஆனந்தப்படுத்துகின்றன. தாம் சிறிதும் ஆனந்தம் கொள்வதில்லை. அது போலவே பகவானுக்கு நாம் உபயோகப்படும் அளவில் அதனால் ஆண்டவனே  ஆனந்தப்படவேண்டும். "சேதன லாபம் ஈஸ்வரனுக்கே பேறு"என்பதால் ஈஸ்வரனே ஆனந்தம் அடைய வேண்டும். நிலா தென்றல் சந்தனம் புஷ்பம் அசேதனம் ஆகையாலே அவைகள் ஆனந்திக்க ப்ராப்தியில்லை. நாம் சேதனர் ஆகையாலே சைதன்யபிரயுக்தமாக நேரக்கூடிய ஆனந்தம் எங்கனே தவிர முடியும்? என்று கேள்வி பிறக்கும். நம்முடைய கைங்கர்யத்தினால் எம்பெருமான் ஆனந்திக்க அது கண்டு நாம் ஆனந்திக்க குறை இல்லை. ஆளவந்தார் தனது ஸ்தோத்ர ரத்னத்திலே "கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி " என்று எப்போது எனது கைங்கர்யங்களால் இறைவா உன்னை ஆனந்த படுத்த போகிறேன்? என்று அருளி இருப்பது "மற்றை நங்காமங்கள் மாற்று" என்ற இப்பாசுரத்தின் வடிகட்டின சத்சம்ப்ரதாயார்த்த  பொருளையே அருளிற்று.

முரளி 
ஜனவரி 12, 2013

No comments:

Post a Comment