ஒருத்தி மகனாய் பிறந்து
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகி தான் தீங்கு நினைந்த
கருத்தை பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ன நெடுமாலே
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்க உரை:
ஒருத்தி மகன் பாசுரத்தின் ஈற்றடியில் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தென்றிருப்பதை நோக்கியது இம்மாலை குறிப்பு.
வருத்தம் தீர்ந்தது எதனாலே என்பதை நாம் ஊஹித்தறிய வேண்டாதபடியே அது பாசுரதிலேயே
பொறிக்கபட்டுளது. திருத்தக்க செல்வமும் சேவகமும் பாட, அதனால் வருத்தம் தீர்ந்ததாக சொல்லப்பட்டிரா நின்றதிரே அப்பாடலின் பொருள் கேளீர் (திருத்தக்க செல்வம்) "துல்ய சீலவையோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷநாம் ராகாவோர்ஹதி வைதேஹீம் தம்சேய மசிதேக்ஷணா" என்று திருவடி சொன்னபடியே பிராட்டிக்கு தக்க பெருமாளும் பெருமாளுக்கு தக்க பிராட்டியுமாக அமைந்த தகுதியான செல்வத்தை பாடி கொண்டே வந்தோம் என்பது அன்யாபதேசத்தில்.
ச்வாபதேசத்திலோ என்னில்: பெரிய பிராட்டியாரோடு ஒத்த செல்வம் உடையவர் சுவாமி எம்பெருமானார். நம்போல்வாற்கு புருஷ கார கருத்தியம் பண்ணி எம்பெருமானடி சேர்ப்பிக்கையே பிராட்டிக்கு செல்வம். அவருடைய திருவடி சம்பந்தம் இல்லாதார்க்கு மோக்ஷமில்லை என்பது சம்ப்ரதாயம்.(சேவகமும் யாம் பாடி) இரட்டுற மொழிதலால் சேவகம் என்ற சொல் பரத்வ சௌலபியங்களை சொல்லும். தமிழில் சேவகம் என்று வீரத்துக்கும் பெயர் ஆதலால் பரத்வம் தெரிவிக்க பட்டதாகும். வட மொழி விகாரம் என்று கொண்டால் சேவக வருத்தி செய்வது என்று பொருள் பட்டு சௌலப்யம் தெரிவிகக்கபட்டது .
திருத்தக்க செல்வம் என்பது திருத்தத்தக்க செல்வம் என்ற படியுமாகும். "ஒண் சங்கதை வாளாழியான் போலே". "பயனன்றாகிலும் பாங்கல்லாராகிலும் செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்" என்றும் "இராமானுச! நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனக்கு ஆக்கியபின் " என்றும் சொல்லுகிறபடியே "உலகில் திருந்தாதார் தம்மை திருத்துகை ஆகிற செல்வம்" அன்றோ ஆச்சார்யர்களுடையது.
"பணிமானம் பிழையாமே அடியேனை பணி கொண்ட" என்றவிடத்து ஈட்டில் ஐதிஹ்யம் கண்டு அனுசந்திப்பது. "ச்க்காலித்யெ சாசிதாரம்" என்பதன்றோ ஆச்சார்ய லக்ஷணங்களில் தலையானது. (சேவகமும்) கண்ணனிடத்திலே பரதவ சௌலபியங்கள் மாறி மாறி விளங்கினாபோலே ஆச்சார்யர்களும், தங்களது ஞான விளக்கத்தை நோக்கும் போது பரத்வம் தோன்றும். அவர்கள் சம்சாரிகளோடு புரையற கலந்து பழகும் போது சௌலப்யம் தோன்றும். ஆகா இவற்றையெல்லாம் சிந்தை செய்வார்க்கு வருத்தங்கள் தீர்ந்து மகிழ்ச்சி யே யாகும் என்ன தட்டுண்டோ?
திருத்தக்க செல்வம் என்பதற்கு உட்புகுந்து ஆராய்ந்து அறியக்கூடிய சீரிய பொருள் ஒன்று கேளீர். நம்முடைய சம்பிரதாயத்தில் வ்யவஹாரங்கள் எல்லாம் திரு என்னும் சொல்லின் சேர்த்தியினாலே மிக சிறப்பு பெற்றிருக்கும். பிறர் அபிஷேகம் என்பர். நாம் திருமஞ்சனம் என்போம் பிறர் பாதம் என்பர், நாம் திருவடி என்போம். பிறர் துளசி என்பர், நாம் திருத்துழாய் என்போம். பிறர் ஆராதனம் என்பதை நாம் திருவாராதனம் என்போம். பிறர் சயனித்தல், நித்ரை செய்தல் என்பர், நாம் திருக்கண் வளர்தல் என்போம். பிறர் ஆடி பூரம் என்பர் நாம் திருவாடி பூரம் என்போம். ஆக, திருத்தக்க செல்வமாவது திருவென்னும் சொற் சேர்த்தியினால் விளைந்த சம்பிரதாய செல்வம். இப்படிப்பட்ட விலக்ஷண சம்பிரதாயத்திலே நாம் ஜனிக்க பெற்றோம் என்று சிந்தனை செய்யச்செய்ய வருத்தமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகுமஅன்றோ! திருத்தக்க செல்வம் என்பதை பன்னி உரைக்குங்கால் பாரதமாம்.
எத்தனை அழகு வார்த்தைகளில்!
சௌ.வை.ராமன்
ஜனவரி 9, 2013
No comments:
Post a Comment