Sunday, January 13, 2013

திருப்பாவை 30ஆம் பாசுரம் - வங்கக்கடல் கடைந்த


வங்கக்கடல்  கடைந்த மாதவனை கேசவனை(த்) 
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி 
அங்கப்பறை கொண்ட ஆற்றை, அணி புதுவை 
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன 
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் 
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதெம்பாவாய்.

வங்கக்கடல் கடைந்த என்கிற நிகமன பாசுரத்தில் இத்திவ்ய ப்ரபந்தம் கற்பார்க்கு பலனுரைத்து தலைக்கட்டுகிறது.  

கீழே ஓங்கி உலகளந்த பாசுரத்தில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து... நீங்காத செல்வம் நிறைந்திடுமென்று பலன் சொன்னது கோபிகள் தாங்கள் அனுட்டிக்கும் நோன்பினால் விளையக்கூடியது. (கற்புடைய மங்கையர்க்கு ஒரு மழை, அறம் பிறழா  அந்தணர்க்கு ஒரு மழை மற்றும் கோல் பிறழா மன்னருக்கு ஒரு மழை என்று மாதம் மும்மாரி என்பது.)  இப்பாசுரம்  இத்திருப்பாவை கற்றார்க்கு பலன் சொல்லுகிறது.  

கீதாசார்யன் "கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன" என்று ஒரு பலனையும் விரும்பத்தகாது  என்று சொல்லி இருக்க, இங்கு பலன் உரைப்பது கூடுமோ? என சங்கிக்கவேண்டா. பலனை விரும்பக்கூடாதென்று  சொன்ன பகவானுக்கு---செய்கிற கார்யம் நிஷ்ப்பலமாய் விடுமென்று  திருவுள்ளம் அன்றே. நாமாக ஒரு பலனை விரும்பினால் தாழ்ந்த பலனைத்தான் விரும்புவோம். உயர்ந்த பலனை விரும்ப நமக்கு தெரியாது. ஆனது பற்றியே பலனை நீ விரும்பாதே என்றபடி. 

இங்கு அருளிச்செய்யப்படுகிற பலன் எப்படிப்பட்டது என்று பார்க்க வேணும். "செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று திவ்ய தம்பதிகளுடைய 
திவ்ய க்ருபா லாபமேயன்றோ பலனாக சொல்லப்பட்டது. இது சாக்ஷாத் பிராட்டி தானே அருளிச்செய்த பாசுரம். ஆகையாலே திருப்பாவை அனுசந்தானத்தினால் உபய விபூதியிலும் நமக்கு இன்பம் நிச்சந்தேகம் என்று தேறி இருக்க ப்ராப்தம். 

நிகமன பாசுரங்களில் தங்கள் திருநாமத்தை பொறித்து வைத்தவர்கள் நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிபொடிஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இவர்களே. பொய்கையார், பூதத்தார்,பேயார், மழிசையர்கோன் ,நற்பாணன் ஆகிய இவ்வைவ்வரும் தங்கள் திருநாமத்தை பொறித்து வைத்திலர். பொறித்துவைத்த ஆழ்வார்கள் தங்கள் திருநாமத்தை மட்டுமே இட்டு வைத்து இருக்க காண்கிறோம்.  "குருஹூர் சடகோபன் சொன்ன", "மதுர கவி சொன்ன சொல்", "குலசேகரன் சொன்ன", "விட்டுசித்தன் விரித்த", "தொண்டரடிபொடி சொன்ன சொல்", "கலியன் சொன்ன சொல்" என்று தானே உள்ளது.  ஆண்டாள் தன்னைப்பற்றி பேசும் போது நியமேன "பட்டர்பிரான் கோதை" என்றே பேசிப்போருகிறாள். இது திருப்பாவையில் மட்டுமன்று. மேல் நாச்சியார் திருமொழியிலும் பதிகம் தோறும் இது காணலாம். இப்படிப்பட்ட நிர்பந்தத்தை ஆண்டாள் எதற்காக வைத்துக்கொண்டாள் என்னில் "கொல்லை  அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால்,நானும் பிறந்தமை பொய் அன்றே." என்றும், "வில்லிபுதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை, வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே" என்றும் இவள் தாமே அருளிச்செய்த படியால்,"ஆச்சர்யனாலேயே  பேறு"  என்று உறுதி கொண்டவள் இவள் என்று நன்கு விளங்குகிறது. இவ்வுறுதியை உலகம் அறிய காட்டுதற்காகவே "பட்டர்பிரான் கோதை", "விட்டு சித்தன் கோதை", "புதுவையர்கோன் கோதை" என்றிப்படியே ஆச்சார்ய புரஸ்காரேண தன்னை நிர்தேசிக்கிறாள்  என்று உணரக்கடவது. 

இது பற்றியே அடியேன் திருப்பாவையின் ஸ்வாபதேச அர்த்தத்தை ஆச்சார்யபரமாகவே நிர்வஹித்து போருவது. கரை கட்டா  காவேரி போல மஹா பிரவாஹமான இந்த ஸ்வாபதேச அர்த்தங்களை இச்சிறு வாசத்தின் மூலம் மிக நுட்பமாக தெரிவித்த அத்தனை. இங்கனே இதில் உள்ள விசேஷ அர்த்தங்களை எல்லாம் விரிவாக தெரிந்து கொள்வதற்கு ருசியை  உண்டாக்கினபடி இது.

ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

With His blessings, I hope to continue with other paasurams of thiruppavai as well other works available with me as much as possible per day.

Wish you all Happy pongal and Healthy days ahead.

முரளி 
ஜனவரி 13, 2013

No comments:

Post a Comment